×
New!

Bayan Al Islam Encyclopedia Mobile Application

Get it now!

நபிக்குத் தவறாத வித்ருத் தொழகை (தமிழ்)

ஆக்கம்: Ahma Ebn Mohammad

Description

இரவுத் தொழுகையின் சிறப்பு வித்ர் ஓர் அறிமுகம் வித்ரின் சிறப்பு வித்ர் தொழுகையின் சட்டம் வித்ரை விடுவது பற்றிய எச்சரிக்கை வித்ரு தொழுகையின் நேரம் பிரயாணத்தில் வித்ருத் தொழுகை எத்தனை ரக்அத்கள் ? அவற்றைத் தொழும் முறைகள் வித்ரில் என்ன ஸூராக்கள் ஓத வேண்டும்? வித்ரில் குனூத் உண்டா? வித்ருத் தொழுகைக்குப் பின் வேறு நபில் தொழலாமா? ஒரே இரவில் இரு வித்ருகள் இல்லை வித்ருத் தொழுகை தவறியவர் என்ன செய்ய வேண்டும்?

Download Book

    நபிக்குத் தவறாத

    வித்ருத் தொழுகை

    ஆக்கம்

    எம். அஹ்மத் (அப்பாஸி)

    மீள்பரிசீலனை

    எம். ஓ. பௌஸுர் ரஹ்மான் (பஹ்ஜி)

    வெளியீடு

    இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி – காலி

    மறுவெளியீடு

    ரப்வா இஸ்லாமிய அழைப்பு நிலையம்

    ரியாத் – ஸவூதி அரேபியா

    صلاة الوتر

    التي لم تفته ﷺ‬

    إعداد :

    أبو عبد الرحمن أحمد بن محمد

    مراجعة :

    الشيخ فوز الرحمن بن محمد عثمان

    الناشر

    كلية ابن عباس العربية - جالي

    إعادة النشر

    المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالربوة

    الرياض - المملكة العربية السعودية

    بسم الله الرحمن الرحيم

    இரவுத் தொழுகையின் சிறப்பு

    இஸ்லாத்தில் தொழுகைக்குள்ள முக்கியத்துவம் வார்த்தையில டங்காதது. விசுவாசிக்கும் நிராகரிப்பாளனுக்கும் இடையிலுள்ள வேறு பாடே இத்தொழுகை தான். ஐவேளைத் தொழுகைகளை விதியாக்கிய அல்லாஹ் அதனைப் பூரணப்படுத்தும் பொடருட்டு அதற்கென முன், பின் ஸுன்னத்துக்களையும் அறிமுகப்படுத்தியுள்ளான். அவனை மென் மேலும் நெருங்க இன்னும் பலவிதமான ஸுன்னத்தான தொழுகைகளை அவன் எமக்குத் தந்துள்ளான். கடமையல்லாத இது போன்ற ஸுன்னத் தொழுகைகளில் முதலிடம் வகிப்பது இரவுநேரங்களில் தொழப்படும் தொழுகைகளே. அதனை அல்லாஹ் நபியவர்களுக்குப் பிரத்தியேகக் கடமையாகவும், அவரது சமூகத்திற்கு முக்கியமான ஒரு ஸுன்னாவா கவும் ஆக்கியுள்ளான். "உமக்கு உபரியாக இருக்க, இரவின் ஒரு பகுதி யில் தொழுகைக்காக எழுந்து நிற்பீராக" (இஸ்ராஃ 79). "இரவில் சிறிது நேரம் தவிர (தொழுகைக்காக) எழுந்து நிற்பீராக" (முஸ்ஸம்மில் 2). இது பற்றி இன்னும் ஏராளமான வசனங்கள் உள்ளன. நபி (ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தியை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக இமாம் முஸ்லிம் தனது ஸஹீஹில் (1163) பின்வருமாறு பதிந்துள்ளார்கள் : "கடமையான தொழுகைகளுக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழு கையாகும்".

    வித்ர் ஓர் அறிமுகம்

    வித்ர் என்ற அரபுச் சொல்லிற்கு ஒற்றை என்பது பொருள். "இரட்டை மீதும், ஒற்றை மீதும் சத்தியமாக" (பஃஜ்ர் 3), "நிச்சயமாக அல்லாஹ் ஒற்றையானவன், ஒற்றையை விரும்புகிறான்" என்று நபியவர்கள் கூறிய செய்தியை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (புஹாரி 6410) இரவு நேரங்களில் தொழப்படும் உபரியான தொழுகைகளை ஒற்றையாக முடிப்பதால் இதற்கு வித்ர் என்று கூறப்படுப்படுகின்றது. இத்தொழுகை வேறு பெயர்கள் கொண்டும் அழைக்கப்படுகின்றது. இரவில் தொழப்படுவதால் கியாமுல்லைல் என்றும், அதே தொழுகை ரமழானில் தொழும் போது கியாமு ரமழான் என்றும், ரமழானில் நீளமாக, ஆர்தலாக ஓய்வெடுத்துத் தொழுவதால் நபிக்குப் பிந்திய காலத்தில் தரா வீஹ் என்றும், அதே தொழுகை தூங்கி எழுந்து தொழும்பட்சத்தில் அதற் குத் தஹஜ்ஜுத் தொழுகை என்றும், ஒற்றையாக முடிப்பதால் முன்னர் கூறியது போன்று வித்ர் என்றும் கூறப்படுகின்றது.

    வித்ரின் சிறப்பு

    வித்ருத் தொழுகையின் சிறப்புப்பற்றி ஏரானமான நபிமொழிகள் வந் துள்ளன. கடமையான ஐவேளைத் தொழுகைக்கடுத்து இஸ்லாம் இதற் கே முன்னுரிமை வழங்கியுள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ பஸ்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார் : "அல்லாஹ் உங்களுக்கு ஒரு தொழுகையை அதிகரித்துள்ளான். அதுதான் வித்ராகும்" (அஹ்மத் 23851 ), அத்துடன் நபியவர்கள் அபூ ஹுரைரா (ரலி), மற்றும் அபூ தர்ர் (ரலி) ஆகியோருக்கு தாம் உறங்கச் செல்லமுன் வித்ரு தொழும்படி வஸிய்யத் செய்துள்ளார்கள். (புஹாரி 1981, முஸ்லிம் 721, அஹ்மத் 21518), இது போன்ற இன்னும் பல நபிமொழிகள் இந்த வித்ருத் தொழுகையின் முக்கி யத்தை எடுத்துக் கூறுகின்றன.

    வித்ர் தொழுகையின் சட்டம்

    வித்ருத் தொழுகையின் சட்டமென்ன? அது கடமையா? அல்லது ஸுன் னாவா ? என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் இரு கருத்துக்கள் உள்ளன:

    1. பெரும்பான்மையான மார்க்க சட்டக்கலை அறிஞர்கள் இத்தொழு கை கடமையானதல்ல, எனினும் கவனித்துத் தொழப்பட வேண்டிய மிக முக்கியமான ஸுன்னா என்ற கருத்திலேயே உள்ளனர். இதற்கு ஆதார மாகப் பின்வரும் நபிமொழிகளைக் கூறுகின்றனர் : ஒரு கிராமவாசி நபியி டத்தில் தினமும் தொழவேண்டிய தொழுகைகளைப் பற்றி வினவிய போது, ஐந்து நேரங்கள் என்று கூறினார்கள். அந்நபர் இதுவல்லாமல் இன்னும் கடமையான தொழுகைகள் உண்டா? என்று வினவினார். அதற்கு நீர் உபரியாகத் தொழுதாலே தவிர என்று நபியவர்கள் பதில் கூறி னார்கள். (புஹாரி 46, முஸ்லிம் 11). "வித்ரு பர்ளான தொழுகைகளைப் போன்று கடமையானதல்ல, எனினும் அது நபியவர்கள் காட்டித் தந்த ஒரு வழிமுறை" என்று அலீ (ரலி) கூறிய செய்தி அஹ்மத் 652, திர்மிதீ 453, நஸாஈ 1676, இப்னு மாஜாஃ 1169 ஆகிய நூட்களில் வலுவான அறிவிப் பாளர் வரிசை மூலம் பதியப்பட்டுள்ளது. இது ஸுன்னா முஅக்கதா என்ப தற்குச் சான்றாக வித்ரின் சிறப்புப் பற்றி நாம் மேற்கூறிய நபிமொழிகளை ஆதாரமாகக் கொள்கின்றனர்.

    2. இமாம் அபூ ஹனீபா (ரஹ்) வித்ருத் தொழுகை வாஜிப் என்ற கருத்தி லுள்ளார்கள். அதற்கு ஆதாரமாக அபூ புர்தா அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் நபியவர்கள் கூறியதாகக் கூறும் பின்வரும் செய்தியைக் கூறுகின்றனர் : "வித்ரு கடமையானது. யார் வித்ருத் தொழவில்லையோ அவர் எம்மைச் சார்ந்தவரல்ல" (அஹ்மத் 23019, அபூதாவூத் 1419),மற்றும் நபியவர்கள் வித்ரு தொழுகை தவறினால் அதனைப் பகல்வேளையில் இரட்டையாகத் தொழுதுள்ளார்கள். கடமையல்லாத ஒரு தொழுகையைக் கழாச் செய்யத் தோவையில்லை என்பதும் ஹனபிய்யாக்கள் முன்வைக்கும் ஆதாரமா கும்.

    வித்ருத் தொழுகை கடமையானதல்ல, ஸுன்னா முஅக்கதா என்ற கருத்தே வலுவானதாகும். இமாம் அபூ ஹனீபா மற்றும் அவரைப் பின்பற் றுவோர் முன்வைக்கும் நபிமொழி பலவீனமானது, அதில் இடம்பெறும் உபைதுல்லாஹ் அல்அதகீ என்பவர் மனன சக்தி மிகவும் குன்றியவர் என விமர்சிக்கப்பட்டவர். இதே செய்தி அபூஹுரைரா (ரலி) வாயிலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இடம்பெறும் முஆவியா பின் குர்ராஃ என் பவர் அபூஹுரைரா (ரலி) அவர்களை சந்திக்கவில்லை என்பதால் இச் செய்தியும் தொடர் அறுப்பட்ட பலவீனமான செய்தியாகும். அத்துடன் இமாம் அபூ ஹனீபாவிடத்தில் பர்ழுக்கும் வாஜிபுக்கும் வித்தியாசமுள் ளது என்பதையும் இங்கு நாம் புரிந்து கொள்ள வேணடும். அவர்கள் ஐந்து நேரத் தொழுகையுடைய இடத்தில் வித்ரை வைத்துப் பார்க்க வில்லை என்பதும் மேற்கண்ட அவருடைய விதிமுறை மூலம் தெளிவாகின்றது.

    வித்ரை விடுவது பற்றிய எச்சரிக்கை

    வித்ருத் தொழுகையை வேண்டுமென்றே விடக்கூடியவர்களை இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) தீயவனென விமர்சித்து அவனது ஹதீஸ் ஏற்றுக்கொள்ளப் படத்தக்க நம்பகமானவனில்லை எனறும் கூறியுள்ளார் கள். அது பற்றி நபியவர்களைத் தொட்டும் அபூ ஹுரைரா (ரலி), புரைதா (ரலி) அகியோர் வாயிலாக இரு செய்திகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும் இரண்டும் பலவீனமான செய்திகள். இதன் முக்கயத்துவத்தைக் கருதி, விடாமல் தொழுவதே மிகச் சிறந்தது. நபி (ஸல்) அவர்கள் பிரயா ணத்தில் கூட இத்தொழுகையை விட்டதில்லை என்பதும் இங்கு குறிப்பி டத்தக்கது.

    வித்ரு தொழுகையின் நேரம்

    வித்ருத் தொழுகையின் நேரம் இஷாத் தொழுகை முடிந்ததிலிருந்து பஜ் ருடைய நேரம் வரை என்பதில் இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. நபி (ஸல்) அவர்கள் இரவின் ஒவ் வொரு பகுதியிலும் வித்ருத் தொழுதுள்ளார்கள். ஆரம்பத்தில், மத்தியில், சில நேரம் அவர்களுடைய வித்ர் ஸஹர் நேரம் வரை நீண்டுமுள்ளதென அன்னை ஆஇஷா (ரலி) அவர்கள் கூறும் செய்தி புஹாரி (996), முஸ்லிம் (745) ஆகிய நூட்களில் இடம்பெற்றுள்ளது. அதிலும் மிகச் சிறந்த நேரம் இரவின் கடைசிப் பகுதியான ஸஹர் நேரமென்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. "இரவின் இறுதிப் பகுதியில் வித்ருத் தொழ முடியாதென அஞ்சு பவர் ஆரம்பத்தில் தொழுது கொள்ளட்டும், இரவின் இறுதியில் தொழ ஆசைப்படுபவர் அவ்வாறே தொழுது கொள்ளட்டும். ஏனெனில் இரவின் இறுதிப்பதியில் தொழப்படும் தொழுகை சாட்சி கூறப்படுவதாகவுள்ளது. அதுவே சிறந்தது" என்று நபியவர்கள் கூறியதை ஜாபிர் (ரலி) அறிவிக் கின்றார்கள். (முஸ்லிம் 755).

    பிரயாணத்தில் வித்ருத் தொழுகை :

    பிரயாணத்திலும் நபியவர்கள் வித்ருத் தொழுகையை விடமாட்டார் களென ஏற்கனவே கூறினோம். ஒரு பிரயாணி பிரயாணத்தில் எப்போது இஷாத் தொழுகின்றாரோ அதிலிருந்து அவருடைய வித்ருத் தொழுகைக் குரிய நேரம் ஆரம்பித்து விடுகின்றது. அவர் மஃரிபுடன் இஷாவை முற்ப டுத்தித் தொழுதால் அந்நேரத்திலேயே அவருக்கு வித்ரையும் தொழுது கொள்ளலாம். ஏனெனில் வித்ருத் தொழுகையின் நேரம் பற்றி நபியவர் கள் கூறும் போது இஷாத்தொழுகைக்கும் பஜ்ருத்தொழுகைக்குமிடை யில் தொழுங்கள் என்பதாகத் தான் இடம்பெற்றுள்ளது. இஷாவுடைய நேரம் என்று கூறப்படவில்லை.

    எத்தனை ரக்அத்கள் ? அவற்றைத் தொழும் முறைகள்

    வித்ருத் தொழுகை எத்தனை ரக்அத்கள் ? அதன் குறைந்த பட்ச ரக்அத் கள் எத்தனை? அதிகபட்சமாக எத்தனை தொழலாம் என்பதில் பல கருத் துக்கள் உள்ளன. அதுபற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

    ஒரு ரக்அத் மாத்திரம் தொழுதல் :

    வித்ருடைய குறைந்த பட்ச எண்ணிக்கை ஒரு ரக்அத்தாகும். ஏனெனில் வித்ர் என்பது ஒற்றை, ஒற்றையில் அதிகுறைந்தது ஒரு ரக்அத். அதுமட்டு மின்றி ஒரு ரக்அத் மாத்திரம் தொழுவதற்கு பின்வரும் நபிமொழிகள் ஆதாரமாக அமைகின்றன. இரவுத்தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களா கும். ஸுபஹ் நெருங்குவதை நீ அஞ்சினால் ஒரு ரக்அத் மூலம் நீ வித்ரு தொழுதுகொள் என்று நபியவர்கள் தன்னிடம் இரவுத்தொழுகை பற்றி கேட்டவருக்குப் பதிலளித்தார்கள். (அறிவிப்பவர் அப்னு உமர் (ரலி), ஆதாரம் புஹாரி 473, முஸ்லிம் 749), மேலும் "வித்ரு என்பது இரவின் இறுதியில் ஒரு ரக்அத் தொழுவதாகும்" என்று நபியவர்கள் கூறியதை இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள் (முஸ்லிம் 752). இமாம் அபூ ஹனீ பா(ரஹ்) ஒரு ரக்அத் மாத்திரம் தனித்துத் தொழுவதைக் கூடாதென்றுள் ளார்கள். நபியவர்கள் தனியாக ஒரு ரக்அத் தொழுவதைத் தடுத்தார்கள் என முஹம்மத் பின் கஃப் அல்குரழீ (ரஹ்) அறிவிக்கும் செய்தியை அதற்கு ஆதாரமாக் காட்டியுள்ளார்கள். எனினும் இச்செய்தி ஒரு தாபிஈ நேரடி யாக நபியிடமிருந்து அறிவிக்கும் முர்ஸல் வகையைச் சேர்ந்ததாகும். எனவே இது பலவீனமானதாகும். இதுவல்லாமல் இன்னும் சில ஆதாரங் களை முன்வைக்கிறார்கள். அவையனைத்தும் அனுமதிக்கு வந்துள்ள செய்திகளை விட பலம் குன்றியதாகவே காணப்படுகின்றன.

    அதிகபட்ச எண்ணிக்கை :

    அதிகபட்சமாக வித்ரு எத்தனை ரக்அத்கள் தொழலாம் என்பதிலும் கருத்து வேறுபாடுள்ளது. ஷாபிஈ மற்றும் ஹன்பலீ மத்ஹபைச் சேர்ந்த வர்களிடம் அதிகபட்ச வித்ர் 11 ரக்அத்களாகும். இமாம் ஷாபிஈயின் மற் றுமோர் அறிவிப்பில் 13 ரக்அத்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. 11 ரக்அத் கள் என்பதற்கு நபி (ஸல்) அவர்கள் ரமழானிலோ, ரமழான் அல்லாத காலங்களிலோ இரவுத் தொழுகையில் 11 ரக்அத்களைக்கான அதிகரிக்க வில்லை என்று ஆஇஷா (ரலி) அறிவிக்கும் செய்தி ஆதாரமாகவுள்ளது. (புஹாரி 1147, முஸ்லிம் 738). 13 ரக்அத்களுக்கு ஆதாரமாக அதே ஆஇஷா (ரலி) அறிவிக்கும் ஒரு செய்தி முஸ்லிமில் (737) பதியப்பட்டுள் ளது : "நபியவர்கள் இரவில் 13 ரக்அத்கள் தொழுவார்கள். அதில் ஐந்து ரக்அத்களை ஒற்றையாக ஒரே தடவையில் தொழுவார்கள். அதன் இறுதி யில் மாத்திரமே உட்கார்வார்கள்". இதே செய்தி உம்மு ஸலமா (ரலி) அவர்கள் வாயிலாகவும் வலுவான அறிவிப்பாளர் வரிசையின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. (அஹ்மத் 26738, திர்மிதீ 458, நஸாஈ 1708).

    மற்றும் சில அறஞர்கள் இவ்விரு நபிமொழிகளையும் இணைத்துப் பொதுவான ஒரு கருத்தைக் கூறுகின்றனர். அதாவது, அதிகபட்ச ரக்அத் களுக்கு வரையறை கிடையாது. இரண்டிரண்டாக இரவில் தனக்கு வசதி யான அமைப்பில் தொழுது கொள்ளலாம். இறுதியில் ஒற்றைப்படையாக அத்தொழுகையை முடித்துக் கொள்ளலாம் என்ற கருத்தைக் கூறியுள்ள னர். அதற்கு ஆதாரமாக நாம் ஏற்கனவே கூறிய "இரவுத் தொழுகை இரண்டிரண்டாகத் தொழப்படும்" என்ற பொதுவான நபிமொழியை ஆதாரமாகக் கொள்வதுடன், நபியவர்கள் 11 அல்லது 13 தொழுதாலும் அதனை விட அதிகரிக்கத் தடை விதிக்காமல் பொதுவாகத் தான் கூறியுள் ளார்கள் என்பதும் இவர்களது அபிப்பிராயமாகும். இவற்றுக்கு ஒரு தீர்வாக நாம் பின்வரும் விடயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    1. நாம் எப்போதும் எமது வணக்கங்களில் நபியவர்களைத் துயர்வது அவசியமாகும். அதனடிப்படையில் வித்ருத்தொழுகை இத்தனை ரக்அத் கள்தான் என்று வரையறுப்பதாக இருந்தால் நபியவர்கள் தொழுத பிர காரம் 11 அல்லது 13 தொழுவது மிக மிகச் சிறந்தது. அப்போது ஆஇஷா (ரலி) வர்ணித்தது போன்று நீட்டி, அழகாகத் தொழ முயற்சிக்க வேண் டும்.

    2. ஒரே நிலையில் நீண்ட நேரம் நிலைத்திருக்க சிரமமாக இருந்து, அதற்குப் பதிலாக எண்ணிக்கையில் அதிகமாக்க விரும்பினால் "இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்கள் தான்" என்ற பொதுவான ஹதீஸை வைத்து அவரது சக்திக்குட்பட்டவாரு தினமும் ஒரே எண்ணிக்கை என்ற அமைப்பில் வரையறுக்காமல் அதிகரிக்கலாம்.

    3. 11 அல்லது 13 விட அதிகரிக்கலாம் என்பதன் அர்த்தம் அதற்கு மேற் பட்ட எண்ணிக்கையில் தினமும் ஒரேயளவு வரையறுத்துத் தொழலாம் என்பதல்ல. குறிப்பாக 23ல் வரையறுப்பதல்ல. அவ்வாறு நபியவர்கள் 23 ரக்அத்கள் இரவுத் தொழுகை தொழுததாக எந்தவித ஸஹீஹான ஆதா ரங்களும் இடம்பெறவில்லை. உமர் (ரலி) அவர்கள் உபைய் இப்னு கஃப் (ரலி) மற்றும் தமீமுத்தாரீ (ரலி) ஆகியோரை 23 ரக்அத்கள் தொழுவிக்கும் படி வந்த செய்திகள் அனைத்தும் பலவீனமானதே.

    4. சிறந்தது என்பதற்கும் அனுமதி என்பதற்கும் இடையில் பாரிய வேறு பாடுள்ளதை இங்கு நாம் கவனித்தாக வேண்டும். நபியவர்கள் தொழுத 11 அல்லது 13டன் நிறுத்திக் கொள்வது மிக மிகச் சிறந்தது. அதற்கே முழு முக்கிய்யத்துவம் கொடுக்கப்பட வேண்டும். என்றாலும் அதைவிட அதிக ரிக்கலாமா? என்றால் மேற்கூறிய பொதுவான ஹதீஸின் அடிப்படை யில் அனுமதியுண்டு. ஆனால் 13க்கு மேற்பட்ட எண்ணிக்கையை வழமை யாகத் தொழுவதற்காக வரையறுத்துக் கொள்ளக்கூடாது.

    மூன்று ரக்அத்கள் தொழும் முறை :

    மூன்று ரக்அத்கள் தொழுவதுதான் வித்ரில் குறைந்தபட்ச எண்ணிக் கையில் பரிபூரணமாகும். ஏனெனில் நபியவர்கள் ஒரு சில சந்தர்ப்பங் களில் மாத்திரம்தான் ஒரு ரக்அத்துடன் சுருக்கியுள்ளார்கள். வித்ரு தொழு கை மூன்று ரக்அத்கள் தொழும் போது அனுமதிக்கப்பட்ட முறைகள் இரண்டும் தடுக்கப்பட்ட முறை ஒன்றும் உள்ளன.

    1. இரண்டு ரக்அத்தில் ஸலாம் கொடுத்து விட்டு ஒரு ரக்அத்தைத் தனியாகத் தொழுதல். (முஸ்லிம் 736).

    2. மூன்று ரக்அத்களையும் தொடர்ந்து தொழுது, இறுதி ரக்அத்தில் மாத்திரம் அத்தஹிய்யாத் ஓதி, ஸலாம் சொல்லல். (நஸாஈ 1701).

    தடுக்கப்பட்ட முறை : மஃரிப் தொழுகையைப் போன்று இரண்டாவது ரக்அத்தில் அத்தஹிய்யாத் ஓதிவிட்டு ஸலாம் கொடுக்காமல் மூன்றாம் ரக் அத்துக்கு எழும்புதல். அதனை நபியவர்கள் தடுத்துள்ளார்கள். (இப்னு ஹிப்பான் 2429, தாரகுத்னீ 1651, ஹாகிம் 1138, பைஹகீ 481). இதன் அறிவிப்பாளர் வரிசை வலுவானது.

    ஐந்து ரக்அத்கள் இரு முறைகளில் தொழலாம் :

    1. ஐந்து ரக்அத்களையும் சேர்த்து ஒரே தடவையில் தொழுது, ஐந்தா வது ரக்அத்தில் மாத்திரம் அத்தஹிய்யாத் ஒதி ஸலாம் கொடுத்தல். (முஸ் லிம் 737, நஸாஈ 1715, இப்னுமாஜாஃ 1192).

    2. இரண்டிரண்டாகத் தொழுது விட்டு தனியாக ஒரு ரக்அத் தொழுதல். இதற்கு மேலே நாம் கூறிய இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்கள் என்ற பொதுவான ஹதீஸை ஆதாரமாகக் கொள்ளலாம்.

    ஏழு ரக்அத்களையும் இரு முறைகளில் தொழலாம் :

    1. இரண்டிரண்டாகத் தொழுது விட்டு தனியாக ஒரு ரக்அத் தொழுதல்.

    2. எழு ரக்அத்களையும் ஒரே தடவையில் தொழுதல். ஆறாவது ரக்அத் தில் அத்தஹிய்யாத் ஓதிவிட்டு ஸலாம் கொடுக்காமல் ஏழாவது ரக்அத் தையும் தொழுது விட்டு மீண்டும் அத்தஹிய்யாத் ஓதி ஸலாம் சொல்லல். (முஸ்லிம் 746)

    ஒன்பது ரக்அத்களையும் இரு முறைகளில் தொழலாம் :

    1. இரண்டிரண்டாகத் தொழுது விட்டு தனியாக ஒரு ரக்அத் தொழுதல்.

    2. ஒன்பது ரக்அத்களையும் ஒரே தடவையில் தொழதல். ஆறாவது ரக் அத்தில் அத்தஹிய்யாத் ஓதிவிட்டு ஸலாம் கொடுக்காமல் ஏழாவது ரக் அத்தையும் தொழுது விட்டு மீண்டும் அத்தஹிய்யாத் ஓதி ஸலாம் சொல் லல். (முஸ்லிம் 746)

    பதினொரு ரக்அத்கள் தொழும் முறைகள் :

    1. இரண்டிரண்டாக 8 ரக்அத்கள் தொழுது விட்டு பின்னர் மூன்று ரக் அத்கள் தொழுதல். (புஹாரி 1147, முஸ்லிம் 738).

    2. இரண்டிரண்டாக 10 ரக்அத்கள் தொழுது விட்டு ஒரு ரக்அத்தை தனி யாகத் தொழுதல். (முஸ்லிம் 737).

    பதின்மூன்று ரக்அத்கள் தொழும் முறை :

    எட்டு ரக்அத்களை இரண்டிரண்டாகத் தொழுதுவிட்டு மீதி ஐந்து ரக் அத்களையும் ஒரே தடவையில் தொழ வேண்டும். (முஸ்லிம் 737).

    நபி (ஸல்) அவர்களுடைய இரவுத் தொழுகைமுறையைப் பல நபித் தோழர்கள் பல விதத்தில் அறிவித்துள்ளனர். அதில் ஸஹீஹான அறிவிப் புக்களில் எமது வசதிக்கேற்ப முறைகளைக் கடைபிடித்துத் தொழமுடியும். முடியாத பட்சத்தில் ஒரு ரக்அத்தையாயினும் தொழ வேண்டும்.

    வித்ரில் என்ன ஸூராக்கள் ஓத வேண்டும்?

    வித்ருத் தொழுகை எத்தனை ரக்அத்கள் தொழுதாலும் அவற்றில் பாத்தி ஹாவுக்குப் பின் வேறு ஸூராக்கள் ஏதாவதொன்று ஓதவேண்டுமென்ப தில் மாற்றுக் கருத்தில்லை. எனினும் இறுதி மூன்று ரக்அத்களில் என்ன ஓத வேண்டுமென்பதில் அறிஞர்கள் கருத்துவேறுபாடு கொண்டுள்ளனர். ஹனபிய்யாக்களிடம் குறிப்பிட்ட ஒரு ஸூரா தான் ஓத வேண்டுமென்ப தில்லை. ஹன்பலி மத்ஹபைச் சார்ந்தோரிடம் இறுதி மூன்று ரக்அத்க ளில் முறையே ஸூரா அல்அஃலா (ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா), ஸூரா அல்காபிரூன், ஸூரா இஃலாஸ் ஆகிய மூன்றையும் ஒதுவது ஸுன்னத்தாகும். இம்மூன்று ஸூராக்களையும் நபியவர்கள் வித்ரில் ஓதியதாக உபைய் பின் கஃப் (ரலி) அறிவிக்கும் நபிமொழியை இதற்கு ஆதாரமாகக் கொள்கின்றனர். (அஹ்மத் 21141, அபூதாவூத் 1423, நஸாஈ 1730). மாலிக் மற்றும் ஷாபிஈ மத்ஹபினர் இறுதி ரக்அத்தில் ஸூரா இஃ லாஸுடன் சேர்த்து ஸூரா பலக், ஸூரா நாஸ் இரண்டையும் ஓத வேண் டும் என்ற கருத்திலுள்ளனர். இதற்கு ஆதாரமாக இப்னு ஜுரைஜ் ஆஇ ஷா(ரலி) அவர்களைத் தொட்டும் நபியவர்கள் இம்மூன்று ஸூராக்க ளையும் இறுதி ரக்அத்தில் ஓதியதாக வரும் செய்தியைக் கூறுகின்றனர். (அபூ தாவூத் 1424, திர்மிதீ 467, இப்னு மாஜாஃ 1173) மூன்றாம் ரக்அத் தில் ஸூரா இஃலாஸ் மாத்திரம் ஓத வேண்டுமென்பதே வலுவான கருத் தாகும். மேற்கூறிய ஆஇஷா (ரலி) அவர்களின் செய்தி இரு அறிவிப்பா ளர் வரிசையில் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாவதில் அப்துல் அஸீஸ் பின் ஜுரைஜ் என்பவர் விமர்சனத்திற்குரியவர் என்பதுடன் அவர்கள் ஆஇஷாவை சந்திக்காததால் இச்செய்தியை அவரிடமிருந்து கேட்டிருக்க வாய்ப்பில்லை. அப்துல் அஸீஸிடமிருந்து இதனை அறிவிக்கும் கஸீப் பின் அப்திர்ரஹ்மான் என்பவர் பலவீனமானவரென இமாம்களான அஹ் மத், இப்னு ஹுஸைமா, யஹ்யா பின் ஸஈத் அல்கத்தான் போன்றோர் கூறியுள்ளனர். இரண்டாவது அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் யஹ்யா பின் அய்யூப் என்பவரும் நினைவாற்றல் குறைந்தவரென விமர் சிக்கப்பட்டவர். இதே செய்தி ஹஸனுல் பஸரீ (ரஹ்) அவர்கள் அபூ ஹுரைரா (ரலி) அவர்களைத் தொட்டும் நபியவர்கள் ஓதியதாக அறிவிக் கும் மற்றுமொரு செய்தி இமாம் தபரானியின் அல்முஃஜமுல் அவ்ஸத்தில் (8839) இடம்பெற்றுள்ளது. எனினும் இதுவும் அறிவிப்பாளர் தொடர் துண்டிக்கப்பட்டது. ஹஸனுல் பஸரீ அபூ ஹுரைரா (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை என்றும், இன்னும் சில அறிஞர்கள் ஒரேயொரு ஹதீஸ் மாத்திரம் தான் அவரிடமிருந்து கேட்டுள்ளார்கள் என்றும் கூறுகின்றனர். ஆனால் அச்செய்தி இதுவல்ல என்பதும் ஊர்ஜிதமானது. எனவே இது பற்றி வந்துள்ள இரு செய்திகளும் பலவீனமானதாக உள்ளதால் இறுதி ரக்அத்தில் ஸூரா இஃலாஸ் மாத்திரம் ஓதுவதே ஸுன்னத்தாகும்.

    வித்ரில் குனூத் உண்டா?

    வித்ரில் ஓதப்படும் குனூத்தைப் பற்றிப் பலவிதமான கருத்துக்கள் உள்ளன :

    1. வருடம் முழுவதும் வித்ரிலே குனூத் ஓதுவது அவசியமென்ற கருத் தை இமாம் அபூ ஹனீபா (ரஹ்) கொண்டுள்ளார்கள். ஆனால் அவரது மாணவர்களாகிய அபூ யூஸுப், முஹம்மத் பின் ஹஸன் ஆகியோர் இது ஸுன்னா என்ற கருத்திலே உள்ளனர்.

    2. வித்ரிலே குனூத் இல்லை, அது பற்றி வந்துள்ள செய்திகள் ஆதார மற்றவை என்ற கருத்திலே மாலிகிய்யாக்கள் உள்ளனர்.

    3. ரமழானில் 15க்குப் பின் குனூத் ஓத வேண்டுமென்ற கருத்தை ஷாபி மத்ஹபைச் சார்ந்தவர்கள் கொண்டுள்ளனர். முழு ரமழானிலும் ஓத வேண்டும், வருடம் முழுவதும் ஓத வேண்டும் என வேறு இரு கருத்துக்க ளும் இவர்களிடம் உள்ளன.

    4. வருடம் முழுவதும் குனூத் ஓதுவது ஸுன்னா என்ற கருத்தில் ஹன் பலி மத்ஹபைச் சார்ந்தவர்கள் உள்ளனர்.

    மேற்கண்ட அனைத்துக் கருத்துக்களுக்கும் பிரதான அடிப்படையாகத் திகழ்வது இரண்டு நபிமொழிகளும் மற்றும் சில நபித்தோழர்களது செயற் பாடுகளும் தான். 1. நபி (ஸல்) அவர்கள் வித்ரு தொழுது, ருகூஃவுக்கு முன்னால் குனூத் ஓதுவார்கள் என்று உபைய் பின் கஃப் (ரலி) அறிவிக் கின்றார்கள். (நஸாஈ 1699, இப்னுமாஜாஃ 1182). 2. நபி (ஸல்) அவர்கள் ஹஸன் (ரலி) அவர்களுக்கு வித்ரிலே ஓதும்படி கூறிய குனூத். (அஹ்மத் 1718, அபூதாவூத் 1425, திர்மிதீ 464, நஸாஈ 1745,).

    இங்கு நாம் சில விடயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    1. நபி (ஸல்) அவர்கள் அவர்களுடைய இரவுத்தொழுகையை அதிக மான நபித்தோழர்கள் அறிவித்துள்ளனர். குறிப்பாக ஆஇஷா (ரலி), உம் முஸலமா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) போன்றோரின் நபியவர்களின் இரவுத்தொழகை பற்றி எத்தனை ரக்அத்கள்? அதனை எவ்வாறு தொழு வார்கள்? போன்ற அனைத்தையும் கூர்மையாக அவதானித்து அறிவித்த வர்கள். இவர்களில் யாரும் நபியவர்கள் வித்ரில் குனூத் ஓதியதாக அறி விக்கவில்லை. அவ்வாறு நபியவர்கள் ஓதியதாக எந்தவொரு ஸஹீ ஹான அறிவிப்பும் இடம்பெறவில்லை என்று இமாம்களான அஹ்மத் பின் ஹன்பல், இப்னு ஹுஸைமா, இப்னுல் கய்யிம் போன்றோர் கூறி யுள்ளனர். மேற்கூறிய உபைய் பின் கஃப் (ரலி) அவர்களுடைய அறி விப்பு மாத்திரம் தான் இவ்விடயத்தில் சில அறிஞர்களிடத்தில் ஸஹீஹா னதாகப் பார்க்கப்படுகின்றது. இதிலும் கூட விமர்சனுமுள்ளது.

    2. நபியவர்கள் ஹஸன் (ரலி) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்ததாகத் தான் மற்ற செய்தி இடம்பெற்றுள்ளது. இதிலும் கூட “வித்ருடைய குனூத் தில்” என்ற சொல் எல்லா அறிவிப்புக்களிலும் இடம்பெறவில்லை என்ப தும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் அறிவிப்பாளர் வரிசையிலுள்ள புரைத் பின் அபீ மர்யமிடமிருந்து பலர் இச்செய்தியை செவிமடுத்துள்ள னர். அதில் ஷுஃபா பின் ஹஜ்ஜாஜ் என்பவரே மிக வலுவான, நம்பக மான, நினைவாற்றலுள்ள அறிவிப்பாளராகத் திகழ்கின்றார். அவர் அறி விக்கும் இச்செய்தியில் இந்த துஆ பொதுவாக கற்றுக் கொடுக்கப்பட்ட தாகத் தான் உள்ளது. “வித்ருடைய குனூத்தில்” என்பது மேலதிகமாக சேர்த்தப்பட்ட வார்த்தை என்பது ஹதீஸ் விமர்சகர்களுடைய கருத்தா கும்.

    3. ஒரு வாதத்திற்காக மேற்கண்ட இரு நபிமொழிகளையும் விமர்சனத் துக்கப்பாற்பட்டதாக எடுத்துக் கொண்டாலும் நபியவர்கள் தொடராக இவ்வாறு செய்து வந்ததாக இதனை எடுக்க முடியாது. சில சந்தர்ப்பங் களில் தான் ஓதியுள்ளார்கள். தொடராக ஓதியிருந்தால் ஆஇஷா (ரலி), உம்மு ஸலமா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) போன்ற நபியவர்களின் இர வுத்தொழுகையை உன்னிப்பாக அவதானித்தவர்கள் இதனையும் கூறியி ருப்பார்கள்.

    4. உமர் (ரலி), இப்னு மஸ்ஊத் (ரலி), மற்றும் பல நபித்தோழர்கள் வித்ரில் குனூத் ஓதியதாகப் பல ஸஹீஹான அறிவிப்புக்கள் உள்ளன.

    5. ரமழானின் 15க்குப் பின் இப்னு உமர் (ரலி) அவர் குனூத் ஓதியதாக சில அறிவிப்புக்கள் உள்ளன.

    6. ரம்மான் முழுவதுமோ, அல்லது பின்பகுதியிலோ தொடர்ச்சியாக வித்ரில் குனூத் ஓதுவதற்குப் பலமான சான்றுகள் போதாது என்பதையும் இங்கு கவனித்திற் கொள்ள வேண்டும். ரமழான் மாத்திரமின்றி ஏனைய காலங்களிலும் இடையிடையே குனூத் ஓதினால் பரவாயில்லை. ஆனால் தொடர்ச்சியாக ஓத இன்னும் வலுவான ஆதாரங்கள் தேவை.

    7. குனூத் ஓதுவதாக இருந்தால் ருகூஃவிற்கு முன்னரும், பின்னரும் இரு விதமாகவும் ஓதலாம். பெரும்பான்மையான நபிமொழிகளில் ருகூஃ விற்குப் பின்னர் என்பதாகத் தான் இடம்பெற்றுள்ளது.

    8. இயன்றளவு அல்குர்ஆன், நபிமொழிகளில் வந்துள்ள துஆக்களைத் தான் கேட்கவேண்டும். மஃமூன்களுக்கு இடைஞ்சலாகும் வகையில் அதி கநேரம் நீட்டுவதும் கூடாது. இன்று அரபுநாடுகளில் பல பள்ளிவாயில்க ளில் இவ்வாறு நடை பெறுவது ஸுன்னாவுக்கு முழுமையான மாற்றம் என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

    9. வித்ரின் இறுதியில் “அல்லாஹும்ம இன்னீ அஊது பிரிழாக்க மின் ஸகதிக, வபி முஆபாதிக மின் உகூபதிக, வபிக மின்க, லா உஹ்ஸீ ஸனா அன் அலைக்க அன்த கமா அஸ்னைத்த அலா நப்ஸிக்க” என்ற துஆவை நபியவர்கள் ஓதுவார்களென அலீ (ரலி) அறிவிக்கின்றார்கள். (அஹ்மத் 751, அபூதாவூத் 1427, திர்மிதீ 3566, நஸாஈ 1747, இப்னு மாஜாஃ 1179). இதனை எச்சந்தர்ப்பத்தில் ஓதுவார்கள் என்று இதில் இடம்பெறவில்லை. எனினும் முஸ்லிமில் (486) இடம்பெறும் ஆஇஷா (ரலி) அவர்களின் செய்தியில் ஸுஜுதிலாகத் தான் இருக்க வேண்டுமென்பதற்கான சான் றுள்ளது.

    வித்ருத் தொழுகைக்குப் பின் வேறு நபில் தொழலாமா?

    "உங்களது இரவுத்தொழுகையில் இறுதியாக வித்ரை ஆக்கிக் கொள் ளுங்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை இப்னு உமர் (ரலி) அவர் கள் அறிவித்துள்ளார்கள். (புஹாரி 998, முஸ்லிம் 751), இந்நபிமொழி யின் அடிப்படையில் எமது இரவுத்தொழுகையில் இறுதியாக வித்ர் தொழ வேண்டுமென்பதில் யாருக்கும் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை. எனி னும் நபியவர்களுடைய இந்த கட்டளை கடமையைக் குறிப்பதா? அல் லது விரும்பத்தக்கதா என்று பார்க்கும் போது இது விரும்பத்தக்கது என்ப தை பிற நபிமொழிகள் மூலம் புரிந்து கொள்ளலாம். வித்ரை இறுதியாகத் தொழுவதுதான் மிகச் சிறந்தது. எனினும் இங்கு ஒரு கேள்வி எழுகின்றது. ஒருவர் இரவின் ஆரம்பத்தில் வித்ரு தொழுதுவிட்டுத் தூங்கிப் பின் பஜ் ருக்கு முன் விழித்தால் அவருக்கு மேலதிகமாகத் தொழலாமா? என்பது தான் அக்கேள்வி. நபியுடைய இந்த ஏவல் கடமையைக் குறிப்பதாக இருந்தால் வித்ருக்குப் பின் பஜ்ரு அதான் வரை வேறு எதுவும் தொழ முடி யாது. விரும்பத்தக்கது என்று வைத்துக் கொண்டால் விழித்ததன் பின் இரட்டையாக பஜ்ரு வரை தொழலாம். இதுவே வலுவான கருத்தாகும். வித்ரு இரவின் கடைசிப் பகுதியில் தொழுவது சிறப்பாக இருந்தாலும் ஆரம்பத்தில் தொழுதவர் மீண்டும் இரட்டையாகத் தொழுவதில் தவறேது மில்லை. அதற்கு ஆதாரமாகப் பின்வரும் நபிமொழிகளைக் கூறலாம் :

    1. நபி (ஸல்) அவர்கள் இரவில் 13 ரக்அத்கள் தொழுவார்கள். முதலில் 8 ரக்அத்கள் தொழுதுவிட்டு பின்னர் வித்ர் (5 ரக்அத்கள்) தொழுவார்கள். பின்னர் உட்கார்ந்து கொண்டு இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள், ருகூஃ செய்யும் போது எழுந்து ருகூஃ செய்வார்கள். பின்பு அதானுக்கும் இகா மத்திற்குமிடையில் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள் என்று ஆஇஷா (ரலி) கூறுகின்றார்கள். (முஸ்லிம் 738)

    2. "நிச்சயமாக இந்தப் பிரயாணம் களைப்பும், சிரமமும் நிறைந்தது. உங்களில் ஒருவர் வித்ரு தொழுது விட்டால் இரண்டு ரக்அத்கள் தொழுது கொள்ளட்டும். அவர் விழித்தால் (மீண்டும் தொழுது கொள்ளலாம்), இல் லாவிடில் இவ்விரு ரக்அத்களும் ஈடாக அமையும்" என்று நபி (ஸல்) கூறி யசெய்தி ஸௌபான் (ரலி) அவர்கள் வாயிலாக பலமான அறிவிப்பாளர் வரிசையுடன் இடம்பெற்றுள்ளது. (தாரமீ 1635, பஸ்ஸார் 4193, இப்னு குஸைமா 1106, இப்னு ஹிப்பான் 2577, தப்ரானீ 1410, தாரகுத்னீ 1681).

    எனினும் நபியவர்கள் இவ்வாறு தொடராகத் தொழுததாக இடம்பெற வில்லை. இது போன்ற நிலைகளில் வித்ருக்குப் பின் தொழ அனுமதி யுண்டு என்பதையே சுட்டிக் காட்டியுள்ளார்கள். அவ்வாறில்லாவிடில் "உங்களது இரவுத்தொழுகையில் இறுதியாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங் கள்" என்ற நபிமொழிக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும். எனவே இதனையே தொடர்ந்து கடைபிடிக்காமல், நாம் இதனை ஓர் அனுமதியாகவே எடுத்து, இரவின் இறுதிப்பகுதியிலேயே எமது வித்ரை ஆக்கிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

    அவ்வாறே வித்ரைத் தூங்க முன் தொழுத ஒருவருக்கு இரவின் பிற்பகு தியில் விழிப்பு ஏற்பட்டால் அவர் ஏதும் தொழுவது ஸுன்னாவுக்கு முரண் எனக் கருதுவதும் பிழையாகும்.

    ஒரே இரவில் இரு வித்ருகள் இல்லை

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "ஒரே இரவில் இரு வித்ருத் தொழு கைகள் இல்லை". (அஹ்மத் 16289, அபூ தாவூத் 1439, திர்மிதீ 470, நஸாஈ 1679). இதனடிப்படையில் ஒரே இரவில் இரு வித்ருத் தொழுகைகள் தொழ முடியாது. ஆரம்பத்தில் வித்ருத்தொழுத ஒருவர் மீண்டும் விழித் தால் இரட்டையாகத் தொழ வேண்டமென்பதுதான் பெரும்பாலான அறிஞர்களின் கருத்து. அதில் அபூ பக்ர் (ரலி), அபூ ஹுரைரா (ரலி), தல்க் பின் அலீ (ரலி), ஸஈத் பின் முஸய்யிப், இப்ராஹீம் அந்நகஈ மற்றும் நான்கு இமாம்கள் பிரதானமானவர்கள். உஸ்மான் (ரலி), அலீ (ரலி), இப்னு மஸ்ஊத் (ரலி), இப்னு உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), முஹம் மத்பின் ஸீரீன் போன்றோர் "உங்களது இரவுத்தொழுகை யில் இறுதி யாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்" என்ற நபி மொழிக்கமைய வித்ரை முறித்து விட்டு இரண்டிரண்டாகத் தொழுதுவிட்டு இறுதியில் மீண்டும் வித்ருத் தொழலாம் என்ற கருத்திலுள்ளனர். வித்ரை முறிப்பதென்பது ஏற்கனவே தொழுத ஒரு ரக்அத்தை இரட்டையாக்குவதற்காக மீண்டும் தனியாக ஒரு ரக்அத் தொழுவதைக் குறிக்கும். நாம் மேற்கூறிய ஆதாரங் களின் அடிப்படையில் இரு முறை வித்ருத் தொழவும் முடியாது. முன்னர் தொழுத வித்ரை முறிக்க வேண்டிய அவசியமும் கிடையாது. விரும்பிய வாறு இரட்டையாகத் தொழுது கொள்ளலாம். இவ்வாறு வித்ரை முறிப்ப வர்களை ஆஇஷா (ரலி வித்ருடன் விளையாடுபவர் என்று விமர்சித்திருப் பதும் குறிப்பிடத்தக்கது.

    வித்ருத் தொழுகை தவறியவர் என்ன செய்ய வேண்டும்?

    வித்ருத் தொழ மறந்தவர் அல்லது தூங்கியவர் நினைவு வந்ததும் அல் லது விழித்ததும் ஸுபஹுத் தொழ முன்னர் தொழுது கொள்ள வேண்டும். நபி (ஸல்) கூறினார்கள் : "தனது வித்ரைத் தொழாமல் தூங்கியவர், அல் லது மறந்தவர் நினைவு வந்ததும் அதனைத் தொழுது கொள்ளட்டும்" (அபூதாவூத் 1431, அஹ்மத் 11265), அபூ ஸஈத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் இச்செய்தி வலுவானதெனப் பல ஹதீஸ்கலை விமர்சகர்கள் கூறியுள்ளனர். இதே கருத்தை இப்னு அப்பாஸ் (ரலி), அதாஃ பின் அபீ ரபாஹ், மஸ்ரூக், ஹஸனுல் பஸரீ, இப்ராஹீம் அந்நகஈ போன்ற நபித் தோழர்கள், தாபிஈன்களில் சிலரும் ஆதரித்துள்ளனர். அத்துடன் இக்க ருத்தை இமாம்களான மாலிக், ஷாபிஈ, அஹ்மத் ஆகியோரும் கொண் டுள்ளனர். இதில் வேறு சில கருத்துக்களுள்ளதும் குறிப்பிடத்தக்கது. எனி னும் சூரியன் உதயமாகி விட்டால் இரட்டையாக அதனைக் கழாச்செய் வதே நபிவழியாகும். ஆஇஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : நபியவர் களுக்கு தூக்கமோ, களைப்போ மிகைத்து இரவுத் தொழுகை நிறை வேற்ற முடியாமல் போனால் அதனைப் பகலில் 12 ரக்அத்களாக நிறை வேற்றுவார்கள். (முஸ்லிம் 746). ஒருவர் வேண்டுமென்றே பஜ்ரு உதயமா கும் வரை வித்ரு தொழாமலிருந்தால் அவருக்குக் கழாச் செய்ய முடியா தென்பதே அநேகமான அறிஞர்களின் கருத்தாகும். ஏனெனில் முன்னர் குறிப்பிட்ட நபிமொழியில் மறதியும், தூக்கமும் தான் காரணங்களாகக் கூறப்பட்டுள்ளன.

    எனவே நபியவர்கள் விடாமல் தொழுது வந்த இத்தொழுகையை நாமும் ரமழானில் மாத்திரமன்றி ஏனைய காலங்களிலும் கடைபிடித்து அதற்காக அல்லாஹ் தயாரித்து வைத்துள்ள நன்மைகளைப் பெற முயற் சிப்போமாக.

    معلومات المادة باللغة العربية